மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு.. 150-க்கும் மேற்பட்ட சிசிடிவிகளை ஆய்வு செய்து 3 நாளில் குற்றவாளியை கைது செய்த போலீசார்!


மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு.. 150-க்கும் மேற்பட்ட சிசிடிவிகளை ஆய்வு செய்து 3 நாளில் குற்றவாளியை கைது செய்த போலீசார்!


சென்னையில் மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட திருடனை, 150-க்கும் மேற்பட்ட சிசிடிவிகளை ஆய்வு செய்து 3 நாளில் போலீசார் கைது செய்த சம்பவம்  ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் பெருமாள் கோவில் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ருக்மணி (87). இவர் சோலையப்பன் தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் செல்ல வேண்டி கடந்த 1ம் தேதி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்குப் பின்னால் நடந்து வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டி ருக்மணியை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 7 1/2 சவரன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு அருகில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பியோடினார். இந்த சம்பவத்தில் மூதாட்டிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. மேலும் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக மூதாட்டியின் மருமகன் பரத் என்பவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மைலாப்பூர் தனிப்படை அமைத்து வழிப்பறி திருடன் சென்ற வழித்தடம், அவரின் அடையாளம் உள்ளிட்டவற்றை கண்டுபிடிக்க சம்பவ இடம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 150-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து திருடனை பின்தொடர்ந்தனர்.

போலீசாரின் இந்த விசாரணையில் அந்த மர்ம நபர் வேளச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் சுற்றித் திறிந்து மயிலாப்பூருக்கு வந்ததும், அங்கு செயின் பறிப்பில் ஈடுபட்ட பின் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

மேலும், சி.சி.டி.வி காட்சிகளில் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்ற வழிப்பறி திருடன் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த முருகன் (37) என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட முருகனை அவரது வீட்டில் வைத்தே தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 7 1/2 சவரன் செயின் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து முருகனிடம் நடத்திய விசாரணையில், முருகன் மீது சென்னை மற்றும் சென்னை புறநகர் காவல் நிலையங்களில் பல வழக்கு பதிவுகள் இருப்பதும் செம்பியம் காவல் துறையினரால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரியவந்தது.

சிறையில் இருந்த முருகன் சமீபத்தில் வெளியே வந்துள்ளார் என்பதும் வெளியே வந்தது குற்ற சம்பவங்களில் ஈடுபட தொடங்கி உள்ளார் என்பதும் தெரியவந்தது.இதனையடுத்து கைது செய்த முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments

Popular posts from this blog