உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக தமிழ்நாடு அரசு ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டிலிருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், ரஷ்யாவின் தாக்குதல் நடைபெறும் இடங்களில் சுமார் ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை பேருந்துகள் மூலமாக உக்ரைனின் மேற்கு பகுதிக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
உக்ரைனின் கிழக்கு பகுதியில் இருக்கும் கார்கிவ் மற்றும் சுமி ஆகிய பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இங்கு சுமார் ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களை மீட்பது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி கூறியதாவது, உக்ரைனில் இருந்து கடைசி இந்தியர் மீட்கப்படும் வரை ஆபரேஷன் கங்கா தொடர்ந்து நடைபெறும். அதிகபட்சமாக உக்ரைனில் 3 ஆயிரம் இந்தியர்கள் தற்போது உள்ளதாக மதிப்பிட்டுள்ளோம்.
போர் நடந்து வரும் பகுதிகளில் இருக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இதுதொடர்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் ராணுவத்துடன் பேசப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் அவர்கள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்கள். இது நமது மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
உக்ரைனின் சுமி மாகாணத்தில் சுமார் 800 இந்திய மருத்துவ மாணவர்கள் சிக்கியுள்ளனர். விடுதியில் இருக்கும் அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விடுதிக்கு வெளியே துப்பாக்கிச் சண்டை, குண்டுவீச்சு நடைபெறுவதாலும், அசாதாரண குளிர் நிலவுவதாலும் மாணவர்களின் நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உக்ரைனில் அண்டை நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் தொடர்புகளை பயன்படுத்தி இன்று 35 மாணவர்களுக்கு போர் பகுதியில் இருந்து அண்டை நாட்டிற்கு வருவதற்கான பேருந்து கட்டணம் ரூபாய் 17500 டாலர்கள் (சுமார் ரூ.14 லட்சம்) தமிழ்நாடு அரசே செலுத்தியது.
இன்று டெல்லியில் இருந்து சென்னை திரும்புவதற்கு தனி விமானத்தை அமர்த்தி உடனடியாக மாணவர்கள் வரவழைக்கப்பட்டனர். உக்ரைனில் தமிழக மாணவர்கள் மீட்பதற்கான சிறப்பு குழு இதில் சிறப்பு தொடர் கவனம் செலுத்தி பணியினை விரைவு படுத்திக் கொண்டிருக்கிறது.
இப்பணிக்கு என்று இதுவரையில் மூன்றரை கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்தின் நிதியை பயன்படுத்தி உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை விரைவு படுத்துமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
Comments
Post a Comment